நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் திருவிழாவில் மாணவிகள் திருவாதிரைகளி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் “ஓணம் பண்டிகை” இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் மருத்துவர் மதன் கார்த்திக், எக்ஸல் பப்ளிக் பள்ளியின் செயலர் பேராசிரியர் கலையரசி ஆகியோர், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்டியது. மாணவ, மாணவிகள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர்.
அப்போது மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவர் மேள தாளம் முழங்க அழைத்து வரப்பட்டார். மாணவிகள், பேராசிரியைகள் கல்லூரி வளாகத்தில் போட்டிருந்த அழகியப் பூக்கோலத்தைப் பார்த்து மகிழ்ந்ததுடன், மாணவிகளின் திருவாதிரைக்களி நடனத்தைக் கண்டு ரசித்த நிகழ்வு, ஓணம் பண்டிகையின் புராண நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவருடன் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கேரள மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தற்போது தமிழகம் உள்பட உலக நாடுகளிலும் கடைபிடிக்கப்படுவது தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக கூறும் மாணவிகள், தங்களது பாரம்பரியத்தை இது போன்ற விழாக்கள் நடத்துவதன் மூலம் பாதுகாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.