சென்னை கேகே நகர் வன்னியர் தெருவில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் கடந்த 25-ஆம் தேதி மாலை மசாஜ் செய்வது போல் வந்த நான்கு நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஊழியர்களின் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் ஐபோன் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.
இது தொடர்பாக கடை ஊழியர்கள் கேகே நகர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் முறையான உரிமம் பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வருவதால் அதை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேகே நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருவொற்றியூரை சேர்ந்த ஜெயசீலன், நொச்சி குப்பத்தை சேர்ந்த பழனிசாமி ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஐஸ் அவுஸ் ராஜீ, ஜெயபால், பூபாலன் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜெயசீலன் மற்றும் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
லைட் அவுஸ் ராஜீ என்பவர் மூலமாக பழனிசாமி , பூபாலன், ஜெயபால் ஆகியோர் பழக்கமாகி ஒன்றாக அமர்ந்து மது அருந்திய படி (Just dial) ஜெஸ் டயல் மற்றும் கூகுள் மூலமாக மசாஜ் சென்டர்களை தேடியதாகவும், அவ்வாறு தேடும் போது வடமாநில பெண்கள் நகை அணிந்து இருக்கமாட்டார்கள் என்பதால், தமிழகத்தை சேர்ந்த பெண்கள் வேலை செய்யும் மசாஜ் சென்டர்களை தேடியதாகவும், வீடியோ காலில் பேசி அவர்கள் நகை அணிந்து உள்ளார்களா என உறுதிப்படுத்தி அதனை போலீஸ் இன்பார்மராக உள்ள ராஜீ மூலமாக சட்டவிரோதமாக நடைப்பெறுவதை உறுதி செய்து அங்கு சென்று கொள்ளை சம்பவத்தை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக செயல்படுவதால் புகார் அளிக்கமாட்டார்கள் என கூறி கொள்ளையில் ஈடுப்பட வைத்ததாக கைதானவர்கள் கூறியுள்ளனர்.
ராஜீ போலீசுக்கு உதவுவது போல நடித்து குற்றவாளிகளுக்கு உதவியதாகவும், போலீஸ் நெருங்குவதை குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.