வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012ம் ஆண்டு அவர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ஆனால் அந்த வழக்கை விசாரித்த எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.