திருச்சுழி அருகே தமிழ்நாட்டில் முதன்முறையாக நேபாள நாட்டில் உள்ளதை போல் 11 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கற்சிலையில் ஐந்து முகங்களுடன் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது
ஓம் நமச்சிவாய கோஷங்கள் விண்ணை பிளக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழகண்டமங்களம் கிராமத்தில் சிவனடியார்கள் சார்பில் பிரமாண்டமாக கட்டப்பட்ட 11 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ஐந்து முகங்களான ஈசானம் , தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற பஞ்சமுகம் கொண்ட அருள்மிகு ஸ்ரீ பச்சை நாயகி என்னும் அபயாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும், பாத விநாயகர், வள்ளி தெய்வானையோடு மூன்று முக முருகன், காலபைரவர், சண்டிகேஸ்வரர், 18 சித்தர்கள், கொடிமரம், நந்தீஸ்வரர், பலிபீடம் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி பூஜை, ஐஸ்வர்யா மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்று. முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரக்ஷா பந்தனம், திருமுறை பராயணம், கோ பூஜை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி கோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பஞ்சமுகஸ்வரருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் என 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. அதேபோல பெண்கள் ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து பஞ்சமுகேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பஞ்சமுகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் முதன்முறையாக நேபாள நாட்டில் உள்ளதை போல் பிரம்மாண்டமான சிலை வடிவமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிவனடியார்கள் ராஜபாண்டி, “மனித தேனீ” சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.