வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு. இவருக்கு யோகேஷ் (வயது 4) என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுவனை தந்தை கண்முன்னே மர்ம கும்பல் சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அப்போது தந்தை வேணு, அந்த காரை தொடர்ந்து துரத்திச் சென்று போது அவரை கீழே தள்ளிவிட்டு சிறுவனை கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் வேணு வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அந்த மர்ம கும்பல் கர்நாடக மாநில எண் கொண்ட காரில் வந்து சிறுவனை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஏழு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்திய போது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை மற்றும் அவருடைய உறவினர்கள் அனைவரின் செல்போன்களுக்கு எந்த அழைப்பு வந்தாலும் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசும்படி தெரிவித்தார்.
அதன் பேரில் வேணு வீட்டின் அருகே இருந்த நபர் ஒருவர் சிறுவன் மாதனூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருப்பதாகவும் சிறுவனின் புகைப்படத்தை தங்களின் செல்போனிற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் உங்களுடைய மகன் தானா என உறுதி செய்யும்படி கூறியுள்ளார்.
அப்புகைப்படத்தை கண்டவுடன் கடத்தப்பட்ட சிறுவன் யோகேஷ் என்பது உறுதியானது. அதன் பின்னர் சிறுவனை மீட்ட போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
மேலும் தகவல் கொடுத்த நபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் சிறுவனை கடத்தியது பாலாஜி என்பது தெரிய வந்தது
பாலாஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை வேணுவின் தங்கை ஜனனி ஒருவரை காதலித்து வந்ததாகவும், இருவரையும் பாலாஜி தான் திருமணம் செய்து வைத்ததாகவும் இதனால் வேணு அவ்வழியாக பாலாஜி செல்லும்போதெல்லாம் முறைத்துக் கொண்டே இருப்பதால் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவரது கார் சேதமடைந்து இருப்பதால் அதனை சரி செய்ய பணம் தேவைப்பட்டதால் இதனை திட்டமிட்டு செய்ததாக ஒப்புக்கொண்டார்.பாலாஜியின் காரை கர்நாடகா போலி பதிவில் கொண்டு சிறுவனை கடத்தியது விசாரணையில் அம்பலமானது. மேலும் தப்பி ஓடிய விக்னேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
பணத்திற்காக நான்கு வயது சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.