கேரள மாநிலம் அடூர் பகுதியை சேர்ந்தவர் நௌஷாத். மீன் விற்பனை செய்து வந்த இவருக்கு, அஃப்சானா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நௌஷாத் வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், “நான் தான் கணவரை அடித்துக் கொலை செய்தேன்.. பின்னர் வீட்டின் தோட்டத்தில் புதைத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், வீட்டின் தோட்டத்தில் தேடி பார்த்தனர். ஆனால், அங்கு எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக குழப்பத்தில் இருந்த காவல்துறையினர் தவித்து வந்தனர்.
இந்த குழப்பத்திற்கு இடையே, நௌஷாத் திடீரென உயிருடன் அடூருக்கு திரும்பினார். அதன்பிறகு தான் உண்மை என்னவென்று வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், உண்மையிலேயே நௌஷாத் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆனால், மனைவி ஏன் பொய் சொன்னார் என்பது புரியவில்லை. 3 நாட்களாக போலீசாரை அலைய விட்ட இந்த சம்பவம் அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.