பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவர் தனது இல்லத்தில் தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக தகவ்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, அவருடைய வீட்டின் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்து வருகிறேன்.

இன்றைக்கு 10:45 மணிக்கு நான் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. மொபைலில் அழைத்தும் அதனை ஏற்கவில்லை. வீட்டின் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தோம்.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன. அவர் எந்த நோய்க்கும் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. தற்போது அவரது நெற்றியில் காயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். தற்போது வாணி ஜெயராம் உடல் சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.