நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளது. விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் விமானம் ஓடுதளத்தில் இருந்து 24.5 கிமீ தூரமே இருந்த நிலையில் தரையிறங்கும் தளத்தை மாற்றியது என தெரிவித்தனர்.

விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. விமானத்தைத் தரையிறக்க கேப்டன் கமல் கேசிக்கு, அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானி, “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்,” என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம் தெரிவித்துள்ளார்.
ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விமானியோ ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரினார் என்ற தகவல் வந்துள்ளது.
10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு மதிப்பிட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.