திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் குடவாசல் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் குருவை நெல் அறுவடை பணிகள் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நன்னிலம் அருகே நெம்மேலி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த பத்தாயிரம் நெல் மூட்டைகளை கடந்த ஒரு வார காலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து மிகப்பெரிய சேதாரத்தை விவசாயிகள் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாத காரணத்தினால் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இனியும் காலம் கடத்தாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது அறுவடை செய்து நெல் மூட்டைகள் மழையில் நனைந்தால் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.