கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறை பட்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள ராமலிங்கம் என்பவரை கட்டாய பணி ஓய்வு வழங்கி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்ததால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கரியலூர் காவல் நிலையத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த ராமலிங்கம் என்பவர் அங்கு சட்டத்திற்கு புறம்பாக போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, விசாரணை செய்து அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் சிறப்பு உதவி ஆய்வாளரை இரண்டு மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தற்போது இரண்டு மாத பணியிட நீக்கம் முடிந்து மூங்கில் துறைப்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராமலிங்கம் பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மீட்டல் ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையானது குறைந்தபட்சமாக இருப்பதாக கருதி சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் ராமலிங்கத்தை காவல்துறையின் அதிகபட்ச தண்டனையாக வழங்கப்படும் கட்டாய பணி ஓய்வுக்கு செல்லும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.