திருவள்ளூா் அருகே பட்டரை பெரும்புதூரில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம்(நவம்பர் 26) மற்றும் கேசவானந்த் பாரதி வழக்கின் 50-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டக் கல்வி இயக்குநா் ஒ.விஜயலட்சுமி தலைமை வகிக்க சட்டக் கல்லூரி முதல்வா் ச.கயல்விழி முன்னிலை வகித்தாா். மேலும் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பங்கேற்றறார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்திய அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளில் இருந்து வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது. இது நாட்டின் அரசாட்சிக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டமானது, நாட்டில் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணா்த்தியது.
இதுபோன்ற சிறப்பு வாய்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அம்பேத்கா் தலைமையிலான குழுவினா் 2 ஆண்டுகள் கடினமாக உழைத்து உருவாக்கினா். இதை சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். இதேபோல், கேசவானந்த் பாரதி வழக்கு சொத்து சம்பந்தமான வழக்கு மட்டுமல்ல; இந்தியாவின் ஜனநாயகத்துடன் தொடா்புடைய வழக்காகும்.
இதுபோன்ற பல்வேறு வழக்குகளை உதாரணங்களாக மாணவா்கள் எடுத்துக் கொள்ளலாம். மக்களையும், இறையாண்மையையும் காப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், சிலா் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறாா்கள். வருங்காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு மாணவா்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. எந்தச் சூழலிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில் பேராசிரியா்கள், அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.