டெக் உலகின் ஜாம்பவானாக இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர் மற்றும் அமேசான், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் சீனாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தனது உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் 60 மில்லியன் யுவான் (72.48 கோடி ரூபாய்) பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூன்று சேல்ஸ் மேலாளர்களுக்கு தலா 6 கோடி வழங்கப்பட்டுள்ளது. போனஸோடு நிறுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகிதம் சம்பள உயர்வும் வழங்கியிருக்கிறது.