மோடி செல்ஃபி பூத்.. ரூ.1.5 கோடி செலவு.. ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் சொன்ன அதிகாரி பணியிட மாற்றம்..

பிரபலமான இடங்களில், பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்வதற்காக, செல்ஃபி பூத் என்ற பகுதி, கட்டமைக்கப்படுவது வழக்கம். இந்த செல்ஃபி பூத் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தீம்களில் உருவாக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியை அடிப்படையாக கொண்டு, அவரது 3டி உருவ அமைப்பிலான பொம்மை ஒன்று தயாரிக்கப்பட்டு, மோடி செல்ஃபி பூத் என்பது, பெரும்பாலான ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மோடி செல்ஃபி பூத்தை அமைப்பதற்கு, நாடு முழுவதும் எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று, ஆர்.டி.ஐ வழக்கு தொடரப்பட்டது. அஜய் போஸ் என்பவர் தொடுத்த இந்த வழக்கில், மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷிவ்ராஜ் மனஸ்புரே என்பவர் பதில் அளித்திருந்தார்.

அதன்படி, மத்திய ரயில்வே மண்டலத்தில், நிரந்தர செல்ஃபி பூத்கள் அமைக்க 1.25 கோடி ரூபாயும், தற்காலிக செல்ஃபி பூத்கள் அமைக்க 40 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால், மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களின் அதிகாரிகள், இதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல், மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷிவ்ராஜ் மனஸ்புரே, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கமாக பணியிட மாற்றம் என்பது இரண்டு ஆண்டுகளில் இருக்கும் சூழலில், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏழே மாதங்களில் எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல், பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும், அவர் எந்தப் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அந்தப் பதவியில், ஸ்வப்னில் டி நிலா என்பவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News