அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த மெயிலில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் அவை புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் வீட்டிற்கு சென்று ஏழு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை நடத்தினர். அதில் எதுவும் சிக்கவில்லை என நிபுணர்கள் தரப்பில் சொல்ல்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல மெயில் மூலம் மிரட்டல் வருவது தொடர்கதை ஆகி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..