மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி. பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த 20ஆம் தேதி தனது இருசக்கர வாகனம் மூலம் சதுரகிரி மலைக்கு சென்றுள்ளார். மலைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அவருடைய வாகனம் காணாமல் போயிருந்தது.
இது தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பைக் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் அந்த இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. திருடப்பட்ட வாகனத்தின் வண்ணம் மற்றும் வாகனத்தின் எண் ஆகியவற்றை மாற்றி மறைத்து ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தமிழ் செல்வனை போலீசார் கைது செய்து அவர் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.