நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர் நமக்கல் மற்றும் பரமத்தில் வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து கொண்டதாக பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். விசாரணையில் அவர் மும்பை தப்பி இருப்பதாக தகவல் கிடைத்ததால் சிபிசிஐடி தனிப்படை போலீசார் மும்பை, கேரளா விரைந்துள்ளனர்.
மேலும் பிற மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி உள்ளதால் அவருடன் நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளளனர்.
இந்த நிலையில், இன்று கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட அவர் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.