தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களும் ,பல்வேறு பிரபலங்களும் புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்ட ரஜினிகாந்த் முதலமைச்சர் மிசாவில் கைதாகி சிறையில் இருக்கும் காட்சிகள் சிலையாக வடிதுள்ள இடம், மற்றும் சில புகைப்படங்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் உடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்
ரொம்ப அருமையான புகைப்பட கண்காட்சி. சேகர் பாபு அழைத்து கொண்டே இருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் வர இயலவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். சேகர் பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர், அவருக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது.
என் இனிய நண்பர் முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்க்கை பயணம் அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான். 54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம். நீண்ட நாள் ஆயுள் உடன் இருந்து சேவை செய்ய வேண்டும். எனக்கும் முதலமைச்சர் உடனான தருணங்கள் நிறைய இருக்கிறது என கூறினார்.
நடிகர் யோகி பாபு பேட்டி
70 வருட வாழ்க்கை வரலாறு பயணத்தை இந்த கண்காட்சியின் மூலம் பார்க்க முடிந்தது. கடுமையான வாழ்க்கையை அனுபவித்திருப்பது தெரியவருகிறது.
அவருடைய போராட்டங்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. நமக்கு தொடர்ந்து நல்லதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார். மேலும் பல நல்லதை செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன் என்றார்.