பெங்களூருவை சேர்ந்த தாசில்தார் அஜித்குமார் ராய் ரூ. 1000 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளார். அவரை லோக் ஆயுக்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தாசில்தார் அஜித்குமார் ராய் (45) அதிகளவில் லஞ்சம் வாங்குவதாகவும், பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து லோக் ஆயுக்தா போலீஸார் கடந்த புதன்கிழமை அஜித்குமார் ராய்க்கு சொந்தமான வீடு, உறவினரின் வீடுகள், நண்பர்களின் அலுவலகங்கள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், வைர கற்கள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை சிக்கின. இதுதவிர ரூ. 3 கோடி மதிப்பிலான 5 சொகுசு கார்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்கள், 65 கைக்கடிகாரங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 36 மது பாட்டில்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பெங்களூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளாப்புராவில் 99 ஏக்கருக்கு நிலம் வாங்கியதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளி அருகே 96 ஏக்கர் நிலம், 18 ஏக்கரில்பண்ணை வீடு ஆகியவற்றின் ஆவணங்களும் சிக்கின. இதுதவிரகண்ணூரில் 30 ஏக்கர் நிலம், பெங்களூரு நகரில் 18 வீட்டுமனைகள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என லோக் ஆயுக்தா வட்டாரம் தெரிவிக்கிறது.