ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்றும் கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து சென்னை போலீசார், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார் படுத்தினர். இதையடுத்து, போலீசார் ஈரோடு பேருந்து நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதே போல், ஈரோடு ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஒவ்வொரு நடைமேடை, ரயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய போன் நம்பர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.