தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட நிலையில் அவருக்கு எதிராக அமைச்சர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் டி.ஆர்.பாலுவினை குறுக்கு விசாரணை செய்வது தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மெமோ பைல் செய்திருப்பதாகவும், அடுத்த வாய்தாவில் தானே வழக்கை நடத்த நீதிபதியிடம் முறையிட்டுள்ளதாக கூறினார்,
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது தான் தன்னுடைய நோக்கம் என்று காட்டம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக கூறினார்.
மேலும் அக்கூட்டத்தில் யாராவது மர்ம நபர்கள் கலந்து கொண்டார்களா.? யார் வந்து போனார்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு அதற்கான பயிற்சி பெற்ற ஏஜென்சி வேண்டும் என நினைத்துதான் சிபிஐ விசாரணை கேட்டதாகவும் , பாஜகவின் வழக்கறிஞர் ஒருவரும், மாமன்ற உறுப்பினர் ஒருவரும் தனித்தனியாக அவரது விருப்பத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததாகவும் , இன்று அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பதும், கூடுதலாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறுவதற்கு அதிகாரிகள் நியமித்திருப்பதன் வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், போலியாக சிலர் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரிகளாக இருந்தால் கூட அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர்களை தவறாக வழி நடத்துபவர்களை கூட உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.