தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்க சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே தவெக கரூர் நகரப் பொருளாளர் பவுன்ராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட 4 பேர் வதந்தி பரப்பியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் சென்ற வாகனத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்க வாகனத்தை பறிமுதல் செய்திட காவல்துறையினருக்கு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு விரிவான உத்தரவையும் வழங்கியுள்ளார்.