அரசியலில் நடிகர் விஜய் ஒரு சின்ன பிள்ளை. ஆளுங்கட்சி விமர்சனம் செய்யாமல் எப்படி அவர் அரசியல் செய்ய முடியும் என ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி.
தவெக தலைவர் விஜய் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விஜய் அரசியலில் ஒரு சின்ன பிள்ளை ஆளும் கட்சியை விமர்சனம் செய்யாமல் அவரால் எப்படி அரசியல் செய்ய முடியும் என விமர்சனம் செய்து பேசினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம், அன்பு கரங்கள் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று குழந்தை பயனாளிகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டை மற்றும் காசோலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: தமிழக அரசு குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பயன்பெறும் வகையில் உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் விரைவில் திறங்கப்படும் எனவும் வரும் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் பசும்பொன் வர இருப்பதாகவும் பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கள ஆய்வுக்கு வரும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை திருச்சி முதல் பிரச்சார பயணத்தின் போது தமிழக அரசை தவெக கட்சி தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசியலில் நடிகர் விஜய் ஒரு சின்ன பிள்ளை எனவே அவரைப் பற்றி அதிகம் பேச ஒன்றும் இல்லை எனவும், ஆளுங்கட்சி விமர்சனம் செய்யாமல் எப்படி அவரால் அரசியல் செய்ய முடியும் என தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.