மண்ணெண்ணெய் கேனுடன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காருகுடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள காருக்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மரத்தின் அடியில் சிறிய அளவிலான அய்யனார் சுவாமி சிலையை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஊர்மக்கள் பங்களிப்புடன் அய்யனார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்வதில் இரு தரப்பு மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து, குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி கோவிலில் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதனை இருதரப்பினரும் ஒத்துக் கொண்டனர்.

இதனிடையே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து கோவிலில் திருவிழா நடத்துவது, முக்கிய முடிவுகள் எடுப்பது, கட்டுமான பணிகள் மேற்கொள்வது மற்றும் நிதி நிர்வாகம் போன்ற அனைத்தும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு அதிகாரிகள் கோவிலில் உண்டியல் வைத்து அதில் வரும் காணிக்கை பொருட்களையும் தங்கள் எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதையறிந்த காருக்குடி கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், கிராம மக்கள் பங்களிப்பில் கட்டப்பட்ட கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையினர் உண்டியல் வைப்பது ஏற்க முடியாது. இந்த கோவில் முழுக்க முழுக்க கிராம மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். இதில் இந்து சமய அறநிலையத் துறையினர் தலையீடு இருக்கக்கூடாது என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் கோவில் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் கோட்டாட்சியர் அனித்தா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில தினங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனை தொடர்பாக தீர்வு காணப்படும் அதுவரையில் கோயிலுக்குள் அறநிலையத் துறையினர் வரமாட்டார்கள் எனவும் உண்டியல் வைக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

RELATED ARTICLES

Recent News