10 வருடங்களாக காதலித்த பெண் ஏமாற்றியதால் காதலன் குவைத்தில் தற்கொலை செய்துகொண்டார் . இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பணியிடமாற்றம். குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட ஆம்புலன்சை வழிமறித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார் இவர் குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் திருப்புங்கூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலி தற்போது வைத்திஸ்வரன்கோவில் காவல்நிலைய எஸ்.ஐ ஒருவரை காதலிப்பதாக கூறி தன்னை நிராகரிப்பதாகவும் வாழப்பிடிக்கவில்லை என்று பெற்றோருக்கு ஆடியோ மெசெஜ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான சரத்குமார் கடந்த 29ஆம் தேதி குவைத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மணவாளன், தாய் சங்கீதா உறவினர்கள் ஊர்பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தனர்.
10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணிற்கு சரத்குமார் அனுப்பி வைத்த 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்துடன் சேர்த்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நம்பிக்கை மோசடி செய்த சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த பிரச்சனையில் எஸ் ஐ. சூரியமூர்த்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று குவைத் நாட்டில் இருந்து சரத்குமார் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பட்டவர்த்தி கடைவீதியில் ஆம்புலன்ஸை வழிமறித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரத்குமார் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பிக்கை மோசடி செய்த காதலி சங்கீதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், சங்கீதா சரத்குமாரிடமிருந்து பெற்ற பணம் நகைகளை பெற்று இழப்பீடு தொகையோடு சேர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் எஸ்.ஐ சூரியமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.