பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் பெற்ற மகனை, தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(45). இவருக்கு ரேவதி(40), உமா(35) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரேவதிக்கு ராசுகுட்டி 21 உட்பட 3 ஆண் பிள்ளைகளும், இரண்டாவது மனைவி உமாவுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த மகனான ராசுக்குட்டி வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜா மற்றும் மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. அதே போன்று நேற்று முன் தினமும், நேற்று இரவும் தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. இச்சம்பவத்தை ராசுகுட்டி தட்டிக் கேட்டதில் தந்தை மகன் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதன் பிறகு தனித்தனியே தூங்க சென்று விட்ட நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு அருகே படுத்திருந்த ராசுக்குட்டி தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தந்தை ராஜாவே மகனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனை அடுத்து ராசுகுட்டியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவான ராஜாவை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் அ.மேட்டூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்த அரும்பாவூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகனை தந்தையே குடும்பத் தகராறினால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.