தேன்கனிக்கோட்டையில் புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக அமைத்து வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக இந்தப் பகுதி தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் பேசும் பகுதி என்பதால் திரைப்பட காட்சிகளை நினைவு கூர்ந்து தத்ரூபமாக அமைக்கும் விதமாக விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், திரைப்படங்களுக்கு செட் அமைப்பவர்களை கொண்டு பிரம்மாண்டமாக பல லட்சம் ரூபாய் பொருட்ச அளவில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாடு முழுவதும் வரவேற்பு பெற்ற பாகுபலி, 2019 ஆம் ஆண்டு அத்திவரதர், 2022 கே ஜி எஃப், 2023 ஆம் ஆண்டு காந்தாரா, 2024 ஆம் ஆண்டு கல்கி உள்ளிட்ட இந்திய அளவில் ஹிட்டான திரைப்படங்கள் அடிப்படையில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபடப்பட்டது.
இந்த ஆண்டு புஷ்பா 2 திரைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல திரைப்பட செட் அமைப்பாளர்கள் ஜிதேந்திரா ஸ்டுடியோ குழுவினரின் உதவியுடன், சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாயிலில் புஷ்பா 2 திரைப்படத்தில் வரும் செம்மரம் தொடர்பான காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் கட்சியில் வரும் அல்லு அர்ஜுன் கை ஆடுவது போலவும், அதன் பின்னணியில், ஹெலிகாப்டர் வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உள்ளே சென்றால், கங்கம்மா தேவி ஜாத்ரா காட்சிகள், தொடர்ந்து உள்ளே நுழைந்தால் பழைய காலத்து கோட்டை, அல்லு அர்ஜுன், காளி, திரிசூலம், காட்சிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்ரீ ராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலின் டிரஸ்ட் நிர்வாகி தெரிவிக்கையில், காவல்துறை சார்பில் இந்த ஆண்டு இந்தப் பகுதியில் சிலை அமைத்து வழிபடுவதற்கு நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதியில் வந்து செல்லும் பக்தர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர் மேலும் இந்த பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் குறிப்பாக கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரவேண்டிய நிலை உள்ளதால் விடுமுறை நாட்களில் மட்டுமே வந்து தரிசிக்க முடியும்.
அதேபோல இது மூன்று மாநில எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடம் என்பதால் இதுபோன்ற திரைப்பட செட் அமைத்து வழிபடுவது மிகவும் பிரபலம் என்பதாலும் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்கள் குறைவு.
எனவே, இந்த விநாயகரை ஏராளமானவர்கள் விரும்பி வந்து வழிபடுவதால் மேலும் இரண்டு நாட்கள் நீடித்து அனுமதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.