அரசாணைகளில் சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய, ஆணைகள் இருந்தால் நீக்கி விட்டு, சிறுபான்மை பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ அருண் பேட்டி.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ அருண் தலைமையில் சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சிறுபான்மையின மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ அருண் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, கடந்த ஜூலை மாதம் முதல் 29 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு செய்துள்ளோம். இதில் 839 கோரிக்கை மனுக்கள் பெற்று 661 கோரிக்கைகள் அந்தந்த கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 178 கோரிக்கைகள் கொள்கை முடிவு சார்ந்தது. இதனை தமிழக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.
இதில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சில பரிந்துரைகள் என்னவென்றால், கல்லறைத் தோட்டம் அமைக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நியமனம் மற்றும் அங்கீகாரம் வழங்குதல், அங்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது. குறிப்பாக அரசு பள்ளி, கல்லூரிகளை எவ்வாறு நடத்துகிறார்களோ அதேபோன்று அரசு உதவி பெரும் பள்ளி, கல்லூரிகளை நடத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை சிறுபான்மை இன மக்கள் வைத்ததால் தான் அங்கு கோரிக்கை சமர்ப்பித்து காலை உணவு திட்டம் நகர்புறத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், தற்போது முதல்வருக்கு எவ்வாறு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் டிஜிட்டல் வகுப்புகள் நடத்தக்கூடிய உபகரணங்கள் புத்தகங்கள் எப்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறதோ அதே திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கும் தர வேண்டும். இந்த ஆணையத்தின் பணி மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளை முதல்வருக்கு சமர்ப்பிப்பது. ஆகவே இதனை தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
அதேபோன்று இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர். அவர்களின் வரலாற்று சின்னத்தை புதுப்பிக்க வேண்டும்.
மேலும், தெர்மல் பவர் பிளான்ட் கழிவுகள் கடலில் கலக்கப்படுகிறது. இதனையும் ஆய்வு செய்யப்படவுள்ளது. மறைந்த ஜிஇ போப் பெயரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இதனையும் அரசிடம் பரிந்துரை வைத்துள்ளோம். மேலும் புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர்கள், அதனையும் முதல்வருக்கு சமர்ப்பித்துள்ளோம். வழக்கம்போல அந்த நாளில் மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அதனையும் மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையும் எடுத்து கூறியுள்ளோம். மேலும், தமிழ் சீக்கியர்களின் குடும்பத்தினருக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை அளித்துள்ளோம். அதுவும் பரிந்துரையில் இருக்கின்றது.
கல்லறை கட்டுவதற்கோ, புனரமைப்பு மற்றும் பழுது பார்ப்பதற்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் 10 கோடி ரூபாய் அதனை 30 கோடியாக அதிகப்படுத்தி கேட்டுள்ளோம். பவுத்த சமூகத்தினருக்கும் மானியம் வழங்க வேண்டும் நாக்பூரில் உள்ள புத்த பூமி கோவிலுக்கு செல்வோருக்கு தொகை குறைவாக உள்ளது இதனையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்.
அரசாணைகளில் சிறுபான்மையின் உரிமைகளை பறிக்கக் கூடிய, அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய ஆணைகள் இருந்தால் அதனை நீக்கி விட்டு, சிறுபான்மை பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்