உசிலம்பட்டி அருகே ஆட்டோவிற்கு வழி விட முயன்ற போது சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி – சாலையை துண்டித்தே லாரியை மீட்க வேண்டிய கட்டாயத்தால் மூன்று கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, புதுநகர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,
இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஒத்தப்பட்டி பாலம் அருகே ஓடையோரம் முறையான தடுப்பு சுவர் இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாக கிராம மக்கள் சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.,
இந்நிலையில் இன்று மூப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவருக்கு போர் போட வந்த லாரி, போர் போட்டுவிட்டு உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த ஒத்தப்பட்டி பாலத்தின் அருகே வரும் போது ஆட்டோவிற்கு வழி விட முயன்றதாகவும், இதில் லாரி சாலையோரம் இருந்த ஓடையில் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
இதில் ஒட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சூழலில், லாரியில் உடன் வந்த கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சரண் என்பவர் சிறு காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.,
மேலும் சாலையை துண்டித்தே ஓடையில் விழுந்துள்ள லாரியை மீட்க வேண்டிய கட்டயம் உள்ளதால், இந்த மூன்று கிராமங்களுக்கு செல்லும் இந்த பிரதான சாலை துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.