சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அதேப்பகுதியில் உள்ள காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அப்போது நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலையானார். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தரனார் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தது.
இந்நிலையில் இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், இன்றைய உயர்நீதிமன்ற விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கு இன்று ஏழாவது ஆண்டை தொட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே போன்று தான் சாத்தான்குளம் வழக்கு. ஆகையால் தமிழகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கொண்டு இந்த விசாரணை மேற்கொள்ளலாம் என நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். சிபிஐ விசாரணையில் நீதிமன்றம் உறுதியாக இருந்தாலும், வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களுக்கு முழு பாதுகாப்பு உத்திவாதம் அளிக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு அனைத்து நிவாரணங்களும் வழங்க வேண்டும் அதே நேரம், இதே வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக தரப்பு வழக்கறிஞர் மாரிஸ்குமார், அரசு தரப்பில் இன்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ரொக்கமாக எந்த நிவாரணம் வழங்கவில்லை என ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். தமிழக அரசு பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு எவ்வளவு தொகை நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டுமென நீதிபதிகள் கேட்டு வழக்கை பிற்பகல் ஒத்தி வைத்துள்ளனர் என்றார்.