ஆவடி அருகே பொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் பிருந்தாவன் அவன்யூ பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 15 ஆம் தேதி திருமுல்லைவாயலில் நகை கடையில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் நகை கடை உரிமையாளர் ரமேஷை தாக்கி 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்தனர்..
ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் ராஜஸ்தானில் முகாமிட்ட போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஹர்ஷட் குமார் பத்,சுரேந்தர் சிங் இருவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நகை கடைக்காரர் நடத்திய நாடகம் அம்பலமானது..
நகை கடை உரிமையாளர் ரமேஷ் குமார் கடனில் சிக்கி உள்ள நிலையில் கொள்ளை நாடகம் அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. திருடப்பட்டு கொண்டு சென்ற நகைகளும் நாடகத்திற்கு பயன்படுத்திய போலி நகை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் ஹர்ஷட் குமார் பத்,சுரேந்தர் சிங் மற்றும் நகை கடை உரிமையாளர் ரமேஷ் குமார் ஆகிய மூவரையும் தற்போது கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு வந்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு, பிடித்த காவல் துறை குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.