முடிந்தது தடைகாலம்: உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்!

மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட மீனவர்கள் விசைத்தறி படகுகள் மூலம் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடை காலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இந்தாண்டும் வழக்கம் போல வங்கக் கடலையொட்டிய, கிழக்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் தடைகாலம் ஏப்.15ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ம் தேதி வரை என 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்தது.

இந்த நிலையில் தடைகாலம் முடிந்த நிலையில், நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி படகுகள் மூலம் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.

விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்றன. மேலும், மீனவா்கள் ஒரு வார பயணத்துக்கான உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்டவற்றை படகுகளில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒவ்வொரு விசைத்தறி படகுகளுக்கும் பூஜை செய்து, மீனவர்கள் வழிபட்டு படகுகளை கடலுக்கு எடுத்துச்சென்றனர்.

RELATED ARTICLES

Recent News