பாலிவுட் சினிமாவில் பல தரமான திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். தென்னிந்திய சினிமாவின் மீது அதிகப்படியான மரியாதை வைத்துள்ள இவர், இங்குள்ள கலைஞர்கள் பலரை பாராட்டி பேசியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இமைக்கா நொடிகள், லியோ ஆகிய திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“சினிமாவில் புதிததாக வருபவர்களுக்கு, உதவி செய்வதற்காக நான் எனது நேரத்தை செலவழித்திருக்கேன்.
ஆனால், அந்த நேரங்கள் அனைத்தும் கடைசியில் வீணாகி தான் போனது. இனிமேல், தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்ளும் சில நபர்களை சந்திப்பதற்காக, என்னுடைய நேரத்தை வீணாக்க மாட்டேன்.
எனவே, என்னுடன் நேரம் செலவிடுவதற்கு, நான் சில விலை நிர்ணயங்களை கொண்டுள்ளேன். யாராவது என்னை 15 நிமிடங்களுக்கு சந்திக்க வேண்டும் என்றால், ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்.
இதேபோல், அரை மணி நேரத்திற்கு இரண்டு லட்சமும், ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சமும், விலை நிர்ணயம் செய்துள்ளேன்.
நான் என்னுடைய நேரத்தை, இதுமாதிரியான நபர்களை சந்திப்பதற்கு செலவழித்து, சோர்ந்துவிட்டேன்.
உண்மையிலேயே நீங்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால், இந்த தொகையை செலுத்தி ஆக வேண்டும். மேலும், பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.”
இவ்வாறு தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
மேலும், இதை நான் நிஜமாகவே கூறியுள்ளேன் என்றும், நான் ஒன்றும் அறக்கட்டளை நிறுவனம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.