திண்டுக்கல் அரசு மருத்துவரான டாக்டர் சுரேஷ் பாபு என்பவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டுமானால், தங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.
முதலில் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் கொடுத்திருக்கிறார் டாக்டர் சுரேஷ் பாபு. இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அங்கித் திவாரியை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் பல ஆணவங்கள் பிடிபட்ட நிலையில், அங்கித் திவாரியை போலீஸார் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இரவு ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரை 15 நாடகள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் தற்போது விடுத்துள்ள அறிக்கையில், “அங்கித் திவாரி மட்டுமல்லாமல் மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கித் திவாரியை போல இன்னும் பல அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.