ராம் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பார்க்கிங்’. டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் சில விசயங்களை பகிா்ந்தாா் அதாவது , “ஒரு படம் ஜெயிப்பதும், தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தைத் தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன்.
அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் அதாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார்.
இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது.
எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தொிவித்துள்ளாா்.