தமிழ் சினிமாவில், அரசியலை நுழைத்து, நேர்த்தியாக கதை சொல்லி, அதை வெகுஜன படமாக மாற்றி வெற்றி பெற்றவர் இயக்குநர் ஜனநாதன்.
தனது ஒவ்வொரு கதையிலும், வித்தியாசமான கதை மாந்தர்கள், கதை களங்கள் என்று புதுமைப் படைத்து வரும் இந்த இயக்குநர், ஆனால், ஒரே மாதிரியான அரசியலை தான், தன்னுடைய காலம் முழுவதும் பேசி வந்துள்ளார்.
அதாவது, ஏழை எளிய மக்களின் வலியையும், அவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் சுரண்டப்படுவதையும் தான், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பேசி வந்திருக்கிறார்.
இத்தகைய இயக்குநரின் முதல் படமாக அமைந்தது தான், இயற்கை திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி, இன்றோடு, 20 வருடங்களை கடந்துள்ளது. கப்பலில் பணியாற்றும் இளைஞன், நாடு முழுவதும் சுற்றிவிட்டு, தனது தேசத்திற்கு வருகிறான்.
அப்போது, அங்கு இன்னொரு கப்பலுக்காக காத்திருக்கும் நாயகியையும், அவளது காதலையும் பற்றி அறியும் கதாநாயகன், அவளுக்காக உதவுகிறான். இதற்கு இடையே, அந்த நாயகி மீதே காதலில் விழுகிறான்.
இறுதியில், இந்த முக்கோன காதல் கதையின் முடிவு எதுவாக இருந்தது என்பதே கதை. தமிழ் சினிமாவுக்கு பரிட்சயம் இல்லாத ஒரு கதை. நாயகியின் காதலுக்கு நாயகனே உதவுவது.
இவ்வாறு கதை ஒரு பக்கம் நம்மை கவர்ந்தால், கதை நடக்கும் களங்களின் வழியாகவும், நம்மை ஜனநாதன் சிலிர்க்க வைத்திருப்பார். துறைமுக பகுதிகளின் பக்கங்களை இதுவரை சொல்லாத தமிழ் சினிமா, இயற்கை படத்தின் மூலம் அந்த தவிப்பை சரி செய்திருந்தது.
ஒரு பக்கம் கதை, திரைக்கதையின் மூலம் ஜனநாதன் ஜாலம் செய்துக் கொண்டிருந்தால், இன்னொரு பக்கம் இசையின் மூலம், வித்யாசாகர் மனங்களை மயக்கியிருப்பார்.
இந்த படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்களும், காதல் தோல்வி பாடல்களும், இன்னும் பலரது Playlist-களை அலங்கரித்துக் கொண்டிருப்பது, இதற்கு இன்னொரு சான்று.
இவ்வாறு ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்த இந்த திரைப்படம், இன்றுடன் வெளியாகி, 20 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. இதனை குறிப்பிட்டு, இணையத்தில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.