டெல்லி ஆக்ராவில் 10 வது உலக கிராஸ்போ சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் காவல் துறை பயிற்சி மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா,அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹர்ஷணா, நவாஆதித்யா, சுந்தரமூர்த்தி, ரிதனீஷ், தேவபிரியன்
உள்ளிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற தனிப்பிரிவு மற்றும் குழு பிரிவு போட்டியில் மாணவி ஹர்சனா, இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இதேபோல், மாணவன் நவா ஆதித்யா, ஜூனியர் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற தனி பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். இதர மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றனர்.
ஆக்ராவில் இருந்து தங்களது சொந்த ஊரான பொள்ளாச்சி சீலக்காம்பட்டி கிராமத்திற்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு அப்பகுதி பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
