தென்னை மர துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற போதை ஆசாமி கைது..!

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் நாள்தோறும் பல விரைவு, மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில்,கடந்த 6ம் தேதி நள்ளிரவு அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இன்ஜினை ஓட்டுநர் மதியழகன் ஓட்டி சென்றார். அந்த இன்ஜின் திருநின்றவூர் – நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் 5 அடி நீளமுள்ள தென்னை மரத்துண்டு ஒன்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநர் மதியழகன் ரயில் இன்ஜினை நிறுத்த முயன்றார். அதற்குள் மரத்துண்டு ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கியது.

தொடர்ந்து, ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மரத் துண்டை சக்கரத்திலிருந்து அகற்றினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பிறகு அந்த மரத் துண்டை, ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தேகத்திற்கு இடமான சிலரை பிடித்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருநின்றவூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக தண்டவாளத்தில் சுற்றித்திரிந்த பாபு என்பவரை பிடித்து திருவள்ளுர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இவர் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தென்னை மர துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றது தெரியவந்தது. அதன் பேரில் பாபுவை கைது செய்த போலீசார் 150 (1) (a) ரயில்வே சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News