அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விதித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளார்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் மக்கள் செல்வாக்குடன் ஆளுமை மிக்க தலைவர்களாக இருந்த போதிலும் தங்களுடன் முரண்பட்டவர்களை அரவணைத்து, கட்சி நலனுக்காக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்குமாறு தான் உட்பட 6 மூத்த தலைவர்கள் நேரில் சென்று வலியுறுத்திய போதிலும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி அதனை ஏற்கும் மனநிலையில் இல்லை என்று செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மனம் திறந்து பேசப் போவதாக சில நாட்கள் முன் அவர் அறிவித்திருந்த நிலையில்., தற்போது அவை தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமின்றி பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட தங்களது கருத்துகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருவதாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, செங்கோட்டையன் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், “செங்கோட்டையன் விவகாரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு தான் எங்கள் முடிவு என்றும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.