வெளிநாட்டை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்துதல், பரஸ்பர வரி விதிப்பு முறை என்று, தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, அதிபர் டெனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவின் சினிமாத்துறை மிகவும் வேகமாக உயிரிழந்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை காப்பாற்றும் விதமாக, வெளிநாடுகளில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று, தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பான பணிகளை தொடங்குவதற்கு, அமெரிக்காவின் வணிகம் மற்றும் வியாபாரத்துறைக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கவரும் வகையில், அவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகளை பிற நாடுகள் வழங்குகின்றன என்றும், இது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அவர் விமர்சித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, மீண்டும் திரைப்படங்கள் அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வனிகத்துறை செயலாளர் ஹோவர்டு லுட்னிக், “டிரம்பின் உத்தரவை நிறைவேற்ற, நாங்கள் தொடர்ந்து, பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஆனால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அமெரிக்க திரைப்பட நிறுவனங்களுக்கு தான் இந்த உத்தரவை அவர் வெளியிட்டுள்ளாரா? அல்லது அமெரிக்காவை சேராத மற்ற மொழி திரைப்படங்களுக்கும் இது பொருந்துமா என்பது, தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.