வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுபகுதி இன்று (மே.24) ரீமெல் புயலாக உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, நாளை (மே 25) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பின்னர், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 25 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ., காட்டுமயிலூரில் 18 செ.மீ., விழுப்புரத்தில் 17 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 14 செ.மீ., கடலூர் மாவட்டம் லக்கூர், தொழுதூரில் 13 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம், கோவை மாவட்டம் வால்பாறை, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 11 செ.மீ., திருப்பூர் மாவட்டம் அவிநாசி, நீலகிரி மாவட்டம் கெத்தை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.