ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கலால் வரி கொள்ளை வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்தும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையிலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில், பிரச்சார பாடல் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி, நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எதிர்கட்சியினர் ஜெயிலில் அடைக்கப்படுவதும், பிரச்சாரம் செய்வதில் இருந்து தடுத்து நிறுத்தப்படுவதும், சர்வாதிகார ஆட்சியில் தான் நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார பாடலை, இன்று ( நேற்று ) தடை செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் பிரச்சார பாடலை தடை செய்வது என்பது, இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறையாக நடந்திருக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ-யை பயன்படுத்தி, எதிர்கட்சி தலைவர்களை பாஜக ஜெயிலில் அடைக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஆத் ஆத்மி அதனை தனது பிரச்சார பாடலில் கூறியதற்கு, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதிஷி தனது எதிர்ப்புகளை கூறிய நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆத் ஆத்மி கட்சி உருவாக்கியுள்ள பிரச்சார பாடலை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது என்ற தகவல் உண்மைக்கு மாறானது என்று டெல்லியின் தலைமை தேர்தல் அலுவலகம் கூறியுள்ளது.