நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார்.

தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதையும் கடந்து சென்னைக்கு வந்து தேர்வெழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும்பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்னேறவேண் டும்வைய மேலே!” என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News