இந்தியாவிலேயே விளம்பரங்களுக்காக அதிகமாக செலவளிக்கக்கூடிய கட்சி பாஜக: கனிமொழி!

இந்தியாவிலேயே விளம்பரங்களுக்காக அதிகமாக செலவளிக்கக்கூடிய கட்சி பாஜக என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில், மத்திய பாஜக அரசு திட்டங்களை அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் நன்மைக்காக, எத்தனையோ திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர், பிரதமரைச் சந்திக்கும்போது கோரிக்கையாக வைக்கிறார். ஆனால், எதையுமே இதுவரை நிறைவேற்றிக் கொடுத்தது இல்லை.

அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்கப்பட்டது. அந்த நிதியைக் கூட மத்திய அரசு இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இதுதான் உண்மையான நிலை. எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்களைக் கொண்டு வந்தபோது எந்தக் காலத்திலும் தடுத்தது இல்லை.

இந்தியாவிலேயே விளம்பரங்களுக்காக அதிகமாக செலவளிக்கக்கூடிய கட்சி பாஜக. அவர்களது விளம்பரங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக மத்திய அரசு கால்வாசிதான் பணம் கொடுக்கின்றனர். முக்கால்வாசி அளவு பணத்தை தமிழக அரசுதான் கொடுக்கிறது.

மத்திய அரசு கொடுக்கும் ரூ.70,000-ஐ வைத்துக்கொண்டு எந்த வீட்டையும் கட்ட முடியாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று பெயர் வைத்து, ஸ்டிக்கர் கொண்டிருப்பது பாஜகதான். பல மாநில எம்பிக்கள் இத்திட்டம் குறித்து பார்வையிட வரும்போது, ஏன் இந்த திட்டத்துக்கு முதல்வரின் திட்டம் என்று பெயர் வைக்கவில்லை என்று எங்களைக் கேட்கின்றனர். எனவே, யார் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கேத் தெரியும்” என்றார்.

RELATED ARTICLES

Recent News