தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விளம்பர பலகை: எடப்பாடி அருகே பரபரப்பு!

எடப்பாடி அருகே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குடியிருப்பு வாசிகள் பதாகை (பிளக்ஸ் பேனர்) வைத்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கேட்டு கடை பகுதியில் உள்ள தாலுக்கா அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் இங்கிருந்து கழிவு நீர் வெளியேறாமல் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாலும், மழைக்காலங்களில் அதிக அளவு மழைநீர் இக்குடியிருப்புகளில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கியிருப்பதாலும், இப்பகுதியில் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு வருகிறது.

மேலும் இப்பகுதியில் தெரு விளக்கு ஏதும் அமைக்கப்படாத நிலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு இத்தகைய அடிப்படை வசதி கோரி அரசிடம் பல்வேறுமுறை முறையிட்டும் உரிய தீர்வு அளிக்கப்படாத நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் புறக்கணிக்க போவதாக கூறி, எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பதாகைகளுடன் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை குடியிருப்பு வாசிகள் திடீரென புறக்கணிக்க போவதாக விளம்பர பலகை வைத்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News