கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக மலையோரம் உள்ள கிராம பகுதிக்குள் யானைகள் அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. அதேபோல ரேஷன் கடைகள் மளிகை கடைகளை யானைகள் சூறையாடி வருகின்றன.
இதனிடைய கோவை கரடிமடை பகுதியில் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை ஒன்று அங்குள்ள வீடுகளில் புகுந்து இரண்டு நபர்களை தாக்கியதோடு அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த இருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த பத்து நாட்களாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.