ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் ரூபாய் இழந்து மன வருத்தத்தில் இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51) இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
சாலிகிராமம் பகுதியில் குடும்பத்துடன் கடந்த நான்கு வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி (ஆக.6) நேற்றைய முன் தினம் அலுவலகத்திற்கு சென்று மதியம் வீடு திரும்பி உள்ளார்.
இவர் தொடர்ச்சியாக ஆன்லைன் விளையாட்டில் விளையாடி 15 லட்சம் ரூபாய் வரை இழந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த தகவலை மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தெரிவிக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் நேற்றைய முன்தினம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தன்னுடைய மகள் மற்றும் மகனுக்கு தொலைபேசியில் இதுவே என்னுடைய இறுதி நாள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த தகவலை பார்த்த மகன் உடனடியாக எதிர் வீட்டில் உள்ள நபருக்கு தகவல் தெரிவித்து அப்பாவை பார்க்கும்படி கூறியுள்ளார்.
அவர் வீட்டுக்கு சென்று பார்க்கும் பொழுது கதவு உள்பக்கமாக தாழ்ப்பால் போட்டுக் கொண்டிருந்ததும் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசார் தகவல் அறிந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விருகம்பாக்கம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று வருடங்களாக ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்து மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.