மத்திய பிரதேச மாநிலம் பாலகட் மாவட்டத்தில் உள்ள குண்ட்வா கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில், காட்டுப் புலி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இந்த புலியை அப்பகுதியில் இருந்து பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என்று, பொதுமக்கள் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், 50 வயதான பிரகாஷ் என்ற முதியவர், தனது விளைநிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த புலி அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம், அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக கொதித்தெழுந்த அப்பகுதி மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசியதையடுத்து, இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது, முதியவரை தாக்கிய புலியை பிடிப்பதற்கு, வனத்துறையினர் கூண்டுகளை வைத்து, முயற்சித்து வருகின்றனர்.