மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டுபிடிப்பு

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கரபுரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அவ்வையாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வந்து அவ்வையாரை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகமும் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி திருமணிமுத்தாற்றின் அருகே உள்ள வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அவ்வையார் வழிபட்ட விநாயகர் கோவில் என்பது அவர் எழுதிய பாடல்களில் மூலமாக தெரிய வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக ஔவையார், விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய முக்கிய இடமாக கருதப்படுகிறது. மேலும் அவ்வையார் முக்தியடைந்ததாக கருதப்படக்கூடிய இடமாக இந்த வித்தகர் விநாயகர் கோவில் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திருமணிமுத்தாற்றின் ஓரமாக அமைந்திருந்த கோவில் மண் மற்றும் குப்பைகளுக்குள் புதைந்து இருப்பதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்திருந்தார். இதனை பசுமை தமிழகம் என்ற அமைப்பினர் மீட்டெடுக்கும் முயற்சியை துவங்கி பொக்லைன் வாகனம் மூலமாக தோண்டப்பட்டது.

அப்போது நான்கடி உயரம் உள்ள ஒரே பாறையில் விநாயகர் சிலை இரண்டடி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதற்கான தூண்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது இதனை சுற்றி வட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து விநாயகர் சிலையை கண்டு வணங்கி செல்கின்றனர்.

தற்போது விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் தூய்மை செய்யும் பணியில் பசுமை தமிழகம் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபடும் தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News