வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். 40 வயதான இவர், செல்போன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, சென்னை ரிச்சி Street-க்கு சென்றுள்ளார்.
அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, வாணியம்பாடிக்கு சென்றுள்ளார். ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே மெதுவாக சென்றுக் கொண்டிருந்தபோது, ரயிலுக்குள் இருந்த சிறுவன் ஒருவன், அப்துல் கரீம் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு, ரயிலில் இருந்து வெளியே எகிறி குதித்து தப்பிச் சென்றான்.
இதனால், அப்துல் கரீம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ரயில் தண்டவாளத்தில் இடது கை மற்றும் இடது கால் சிக்கி துண்டானது. அவரது அலறல் சத்தம் கேட்ட மற்ற ரயில் பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தினர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், செல்போனை திருடிய சிறுவன் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவன் என்பதும், திருடிய செல்போனை ரூபாய் 1,700-க்கு விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கிடைத்த பணத்தை செலவு செய்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஆயிரத்து 700 ரூபாய் பணத்திற்காக, ஒருவரது கால் மற்றும் கை துண்டான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.